அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..??
மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இதில், திமுக பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அடுத்து இருக்கும் கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கும் என சொல்லப்படுகிறது
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக
ஓரளவுக்கு வளர்ந்து விட்டதாக பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். காரணம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நபராக இருக்கிறார்.
இந்த தேர்தலில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்கள் அதிகம் இருக்கிறார்கள். உதாரணமாக புதுச்சேரியில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டு,
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவது வரவேண்டும் என்ற பாஜக தலைமையின் உத்தரவுக்கு பின்னரே,
இந்த நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது.
மறுபுறம் பார்த்தால், அதிமுக இந்தத் தேர்தலில் தன்னுடைய பலத்தை எந்த அளவு காண்பிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பல சிக்கல்களை சந்தித்து வந்தது.
சசிகலா ஒருபுறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒருபுறமும் என அதிமுக யாருடைய பிடியில் இருக்கிறது என்பது சொல்ல முடியாமல் இருந்தது. கடைசியில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்த நிலையில், அதிமுகவை வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டு போவார்கள் என்று எதிர்பார்த்த போது, இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனியாக சென்றனர்.
அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் கைபிடிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்றபோது, அந்தப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார் பன்னீர்செல்வம். காரணம் கடைசியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. இதன் காரணமாகவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கி அதிமுகவை களம் இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம் தேனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
அதிமுக கடைசியாக எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்ற நிலையில் அவர் தனியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக தனது பலத்தையும், திமுகவுக்கு தாங்கள் தான் போட்டி என்பதையும் நிரூபிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏனெனில் திமுகவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிக்க போகும் கட்சி அதிமுகவா? பாஜகவா? என்ற நிலை இருக்கிறது. இதனால் திமுகவை விட அதிமுக-பாஜக இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய பலத்தை எப்படி நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.