அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!!
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரின் சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் பெற்றோருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், கோவை தொகுதியில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் எங்கு இருந்தாலும், இன்று மாலைக்குள் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போதுதான் நாட்டில் நல்லாட்சி உருவாகும்.
இந்த தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவை தொகுதியில் ஒரு வாக்காளருக்கு பாஜக சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக உள்ளேன். பண அரசியலுக்கு மக்கள் முடிவுகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். இந்த தேர்தல் முழுக்க முழுக்க அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.