தேர்தலை புறக்கணித்து கண்மாயில் தஞ்சமடைந்த கிராம மக்கள்..சமரசம் பேச வந்த அமைச்சர் விரட்டியடிப்பு..!!
தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் நடந்துள்ளது. முக்கியமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதேபோல குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
இதுதவிர இன்னும் சில பகுதிகளிலும் ஒரு சில கோரிக்கைகளை கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்திலும் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சரையும் அவர்கள் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டலூரணி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 3 மீன் ஆலைகள் உள்ளதாம். அதில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
அதன்படி மொத்தம் 929 வாக்காளர்கள் உள்ள அந்த கிராமத்தில் மீன் ஆலையில் பணியாற்றும் குழும்பத்தை சேர்ந்த 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவர்கள் தவிர பணியில் இருந்த காவலர்கள் வாக்களித்தார்களாம். அதுமட்டுமின்றி அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்ததாக காண்பிப்பதற்காக கள்ளவோட்டு போட சிலர் காரில் வந்துள்ளனர். அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. உடனே கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் அவர்கள் விரட்டி அடித்துள்ளனர். வீடுகளில் இருந்தால் வாக்களிக்க சொல்வார்கள் என்று கிராம மக்கள் அனைவரும் கண்மாயில் தங்கி சமைத்து சாப்பிட்டு நேற்று தேர்தலை முழுவதுமாகவே புறக்கணித்துள்ளனர்.