என்னம்மா உருட்டுறாங்க.. அண்ணாமலையை கலாய்த்து ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்..!!
கோவையில் வாக்காளர்கள் சிலர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இல்லை என்று கூறி குற்றம் சாட்டினார்கள். அப்போது அங்கு வந்த அண்ணாமலை அவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “கோவையில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் பாஜக ஆதரவு வாக்காளர்கள். இதற்கு யார் காரணம்? இதில் அரசின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. நிச்சயமாக கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு நடிகையும் அதிமுக மகளிர் அணி துணை செயலாளருமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி இதுகுறித்து காயத்ரி ரகுராம் அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “பூத் ஏஜெண்ட் இல்லை என்றால் இப்படிதான் நடக்கும். வாக்காளர்கள் முன்கூட்டியே சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் 1 லட்சம் பட்டியலில் இல்லாத வாக்காளர்கள் என்று தோராயமாக கூறுகிறார்கள். அதுவும் பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர் மட்டுமே விடுபட்டிருப்பதாக கூறியுள்ளனர். அடிச்சு விடுகிறார். நல்லா உருட்டவும்” என்று நக்கலான பதிவு ஒன்றை செய்துள்ளார்.
காயத்ரி ரகுராம் முன்னதாக பாஜக கட்சியில் இருந்த நிலையில், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது வரை அவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.