விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசு விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் 3,674 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பாஜக ஆட்சியில் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து அஜய் பாசுதேவ் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன்1 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி விளம்பரங்களுக்காக செய்த செலவு குறித்த தகவலை நிதியாண்டு வாரியாக அளித்துள்ளது.
அந்தவகையில், பாஜக அரசு நாளிதழ்களில் விளம்பரம் செய்த செலவுகள் குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும் தொலைக்காட்சி, ஆல் இந்தியா ரேடியோ, துர்தர்ஷன் மற்றும் சிஆர்எஸ் ஆகியவை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 2,969 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதில், போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் ரயில் டிக்கெட்டுகளில் செய்த விளம்பரம் குறித்த தகவல்கள் இல்லை.
மேலும், தொலைக்காட்சி அல்லாத இணையதளம், குறுஞ்செய்தி, டிஜிட்டல் சினிமா ஆகியவை மூலம் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 700 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. இப்படி மொத்தமாக மத்தியில் ஆண்ட மோடி அரசு 10 ஆண்டுகளில் வெறும் விளம்பரத்திற்கு மட்டும் 3 ஆயிரத்து 674 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இன்னும் இதில் கொரோனா சமயத்தில் செய்த செலவுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவை இருந்தால் இந்த தொகை இன்னும் அதிகரிக்கும்.