ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட துறைமுகத்திற்கு தினமும் ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வந்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர நிறைய மீன் வியாபாரிகளும் மீன்களை வாங்கி ஏலத்தில் விடுவது வழக்கம். இந்த ஏலத்தை காணவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், அதிராம்பட்டினம் கரையூரை சேர்ந்த மீனவர் ரவி இந்த ஏலம் மூலம் லட்சாதிபதியாகியுள்ளார். சமீபத்தில் இவரின் வலையில் அரியவகை மீனான கூறல் கத்தாழை மீன் சிக்கியுள்ளது. சுமார் 25 கிலோ எடை கொண்ட இந்த ஒரு மீன் மட்டும் சுமார் 1.87 லட்சத்திற்கு ஏலம் போனது. அந்த அளவிற்கு இந்த மீனில் மருத்துவ குணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்த இந்த வகை மீன்களுக்கு சுவாசிப்பதற்காக நெட்டி என்ற கூடுதல் சுவாச பை இருக்குமாம். ஆண் மீன்களுக்கு பெரிதாகவும், பெண் மீன்களுக்கு சிறிதாகவும் இருக்குமாம். இந்த நெட்டியில் ஐசிங்கிளாஸ் எனப்படும் பளபளப்பக்கும் ஒரு வகை வேதிப்பொருள் இருக்குமாம். இது ஒயின், ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தபடுகிறதாம்.
இதனால் மீனவர்கள் இதை சேமித்து வைத்து கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்குமாம். ஆனால் இந்த வகை மீன்களை பிடிப்பது மிகவும் கடினமாம். ஏனெனில் ஆழ்கடலில் ஒரு வாரம் வரை காத்திருந்தால் மட்டுமே இதை பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு எப்போதாவது இதுபோன்ற அதிர்ஷடம் கிடைக்குமாம்.