தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..??

0
211
A case has been filed against the villagers of Ekanapuram who boycotted the election..??
A case has been filed against the villagers of Ekanapuram who boycotted the election..??

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..??

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்கள் அடங்கிய கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட 636 நாட்களாக தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை ஏகனாபுரம் கிராம மக்கள் முழுவதுமாக புறக்கணித்திருந்தனர். இதனால் 1375 வாக்குகள் கொண்ட அந்த வாக்குச்சாவடியில் வெறும் 12 வாக்குகள் மட்டுமே பதிவானது.

எப்படியாவது கிராம மக்களிடம் பேசி வாக்களிக்க வைத்துவிடலாமென வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், பேச்சுவார்த்தை சமரசத்தை ஏற்படுத்தாத நிலையில், அதிகாரிகள் மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், வாக்களிக்க தடுத்ததாக கூறி ஏகனாபுரத்தை சேர்ந்த 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி ஏகனாபுரம் கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன், முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம்பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Previous articleவிசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!
Next articleநடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!!