இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!
கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே.
அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஒரு நாளைக்கு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊட்டிக்கு தினமும், 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட நீதிமன்றம் ஒரு நாளைக்கு இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட முடியாது. மேலும் சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும். எனவே ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.
அதனை தொடர்ந்தே கொரோனா ஊரடங்கு சமயத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வரும் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்த வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.