புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி!! ஜூன் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு!!
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது வரை தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களை பிரித்துக் கொண்டு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கிய நிலையில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மீண்டும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடந்து வந்தது.
தற்பொழுது வரை புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கேட்டு 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும் பல மாதங்களாகவே புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. இதில் ஒரு சிலருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்ட் ஒப்புதல் ஆகிவிட்டது என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பப்பட்டு இருக்கின்றது.
இதையடுத்து அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிவிட்டது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இவர்கள் அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டு வைத்திருந்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் “தேர்தல் முடிந்த பின்னர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மறு ஆய்வு செய்யப்படும். பின்னர் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூன் மாதம் 5ம் தேதி முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் மாதம் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும். இதனால் விக்கிரவாண்டி தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும். அதே போல ஸ்மார்ட் ரேஷன் கார்ட் தொலைந்தவர்களுக்கும், திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.