100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.
அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், அதிக இணைப்புகள் இருந்தால் அவற்றில் ஓர் இணைப்பு 1டி கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும், இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கணக்கெடுப்பின்போது ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் நுகர்வோருக்கு ஒரு வீட்டைத் தவிர, மற்ற அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இப்படி வெளியான இந்த செய்தி தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதனை செயல்படுத்த கூடாது என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தின.
இந்நிலையில், ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால், ஒரு இணப்புக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், மீதம் உள்ள இணைப்புகளுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வதந்தி என்று தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
மேலும் தங்களது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்கும் 100 யூனிட் மின்சாரம் பெறலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.