ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!
அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி ஆற்றின் நடுவே தடுப்பணை ஒன்றை கட்டி வருகின்றனர். இதே போல தான் பவானியில் இரண்டு தடுப்பணைகளை கட்டியுள்ளனர். கர்நாடகா அரசு எப்படி மேகதாது அணை கட்ட துடிக்கிறதோ அதேபோல கேரளா அரசும் தண்ணீர் தமிழகத்திற்கு வராமல் இருக்க இதுபோல பலவற்றை செய்து தண்ணீர் தமிழகத்திற்கு வராமல் இருக்க இதுபோல தடுப்பணைகளை கட்டி வருகிறது. இது குறித்து தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
“பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அமராவதி ஆற்றுக்கு பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டி வருவது தான் சிக்கலுக்கு காரணம்.
இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பெருகுடா என்ற இடத்தில் தான் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் குடிநீர் தேவைக்காகவே தடுப்பணை கட்டப்படுவதாக கேரள அரசின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், அதன்பின் அந்த ஆற்றிலிருந்து அமராவதி ஆற்றுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. ஏற்கனவே, அமராவதியின் இன்னொரு துணை ஆறான பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இப்போது சிலந்தி ஆற்றிலும் தடுப்பணை கட்டப்பட்டால், அமராவதி ஆறும், அதன் அணையும் மணல் பாதையாக மாறி விடும். அமராவதியை நம்பியுள்ள கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55,000 ஏக்கர் நிலங்கள் கருகி பாலையாகி விடும்.
சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924ம் ஆண்டு கையெழுத்தாகிய உடன்பாடு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி காவிரி ஆற்றின் குறுக்கேயும், அதன் துணை நதிகளின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டுவது குற்றம் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது எவ்வாறு சட்ட விரோதமோ, அதேபோல் தான், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதும் குற்றம் ஆகும். ஆனால், இதை உணராமல், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பதைப் போலவே கேரளமும் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018ம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 11.03.20218ம் நாள் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.
காவிரி துணை ஆறுகள் மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயன்றால், அதை முதலில் அறிந்து தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை வாயைத் திறக்கவேயில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.