நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. அதனால் தான் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது என்று மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
மதுரையின் 293வது ஆதினமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் இன்று(ஜூன்10) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை நாட்டில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொலை செய்ய காரணமாக இருந்தவர்களும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்பது ஒரு மனவருத்தமாக இருக்கின்றது. இந்த காரணத்தினால் தான் காங்கிரஸ் கட்சியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை.
தற்பொழுது மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள் வைக்கிறேன். ஒன்று இந்திரா காந்தி அவர்கள் தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும். இரண்டாவதாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் ஆதரிக்கின்றேன்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதர். பாஜக கட்சி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அவர்களை தோல்வியடைந்த கட்சி என்று அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக கட்சி பெரும்பான்மைக்கான தொகுதிகளை பெற்று வெற்றி பெற்று இருந்தால் வாக்கு இயந்திரத்தில் பட்டனை தொட்டவுடன் தாமரைக்குத் தான் வாக்குகள் விழுகின்றது என்று அனைவரும் கூறி இருப்பார்கள்.
இந்திய நாட்டில் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மக்கள் கையில் இருக்கின்றது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த பொழுது பல முறை ஆட்சி கலைக்கப்பட்டது. அதுவே பாஜக ஆட்சியில் இருந்த பொழுது ஒரு முறை கூட ஆட்சி கலைக்கப்படவில்லை.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என்று நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்க போகிறேன். பிரதமர் நரேந்திர ரந்திர மோடி அவர்கள் சிவபெருமான் மீது பக்தி கொண்டவர். விபூதி பூசிக் கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோயிலை மீட்டு எடுத்தார். இதுதான் நான் பிரதமர் நரேந்தி மோடி அவர்களை ஆதரிக்க காரணம் ஆகும்.
நான் யாரையும் ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. அதனால் அதிமுக தமிழகத்தில் பெருந்தோல்வியை சந்தித்தது. அதிமுக கட்சி தமிழகத்தில் தேவையான கட்டமைப்புகளை செய்யாதது இன்னொரு காரணம் ஆகும். தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகத்தில் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். நான் இலங்கைக்கு நேரடியாக சென்றால் என்னை சுட்டுக் கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். அதைவிட சிங்கள வெறியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.