கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இருந்த இ-பாஸ் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவோடு பயணம் செய்வதிலும் விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்றால் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ள காரணத்தால் இ-பாஸ் கட்டாயம் என்று அரசு சார்பில் கூறப்பட்டது. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய யாரும் வருவதில்லை.
தினசரி வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவான நிலையில் தற்போது அரசு கட்டுப்பாட்டின் காரணமாக 1000 ஆவணங்கள் கூட பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, வருவாய்துறை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது; ஒரு மாவட்டத்தில் இருந்து பிற இன்னொரு மாவட்டத்திற்கு பத்திரம் பதிவு செய்ய வரும் மக்களிடம் இ-பாஸ் கேட்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் டோக்கன் வைத்திருந்தாலே போதும் அவர்களை அனுமதிக்கலாம் என்றும், இது சம்பந்தமான அரசு அதிகாரிகளுக்கு விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.