இன்றைய சூழலில் உடல் சோர்வு என்பது அனைத்து வயதினருக்கும் ஏற்படக் கூடியதாக இருக்கிறது.முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே உடல் சோர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வந்தனர்.ஆனால் இன்றோ வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.இன்றைய காலத்தில் 20 வயது இளைஞர்களுக்கு கூட உடல் சோர்வு,உடல் வலி,தசை வலி,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
உடல் சோர்வடைய பல காரணங்கள் உண்டு.தவறான உணவுப் பழக்கம்,உடல் உழைப்பு இல்லாமை,மாறிய வாழ்க்கை முறை,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் உடலில் அதிகப்படியான சோர்வு ஏற்படுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை பின்பற்றி உடல் சோர்வை போக்கலாம்.
தேவையான பொருட்கள்:
1)நெல்லிக்காய்
2)புதினா
3)ஓமம்
4)சுக்கு
செய்முறை:-
20 பெரிய நெல்லிக்காயை வெயிலில்படும் இடத்தில் போட்டு வற்றல் பதத்திற்கு காய வைத்துக் கொள்ளவும்.
அதேபோல் 50 கிராம் புதினா இலையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் வற்றல்,புதினா இலைகளை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விடவும்.
அதன் பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு 25 கிராம் ஓமத்தை வாணலி சூட்டில் வறுத்தெடுக்கவும்.இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
முதலில் அரைத்த பவுடருடன் சுக்கு ஓமப் பவுடரை கலந்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி சாப்பிடலாம்.இல்லை என்றால் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடி கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.