மனித உடலின் கட்டமைப்பிற்கு வலிமையான எலும்புகள் இருக்க வேண்டியது அவசியம்.எலும்புகளின் துணை இல்லாமல் உடலை அசைக்க முடியாது.நமக்கு வயதாகும் போது எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்.இதனால் எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இதனால் சிறு வயதில் இருந்தே எலும்புகளை வலிமையாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தவகையில் கால்சியம்,இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்தை உணவாக எடுத்துக் கொண்டால் எலும்புகளின் வலிமை இயற்கையாக அதிகரிக்கும்.
கருப்பு உளுந்தில் கால்சியம்,பொட்டாசியம்,சோடியம்,வைட்டமின்,புரதம்,இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.பருவப் பெண்கள் கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட கலி,கருப்பு உளுந்து கஞ்சி,கருப்பு உளுந்து பால் போன்வற்றை எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு எலும்பு வலிமை அதிகரிக்கும்.
எலும்பு வலிமை பெற.. மூட்டு வலி குணமாக கருப்பு உளுந்து பால் செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:
*கருப்பு உளுந்து – ஐந்து தேக்கரண்டி
*தேங்காய் துருவல் – 1/4 கப்
*ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஐந்து தேக்கரண்டி கருப்பு உளுந்து போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.ஒரு மணி நேரம் வரை ஊறவைத்த பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.அடுத்து 1/4 கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பால் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை உளுந்து அரைத்த பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து உளுந்து பாலை சூடாக்கவும்.குறைவான தீயில் கை விடமால் கிண்டி கொண்டே இருக்கவும்.
உளுந்தின் பச்சை வாடை நீங்கியதும் ஏலக்காய் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் உளுந்து பால் ரெடி.இதை அடிக்கடி செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.