15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக பொதுப்பெயர் மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்கான முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கினார்.
முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவர் சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட விநியோகம் செய்யப்படும் என்றும், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்ட 2025 ஜனவரி மாதம் முதல்வர் மருந்தகங்கள் அமைத்து தரப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.