நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் மேலும் 50% இட ஒதுக்கீடுக்கான உச்ச வரம்பை தகர்க்க முடியும். இதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது என்று மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வருகிற 20 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள மகாயுதி கூட்டணிக்கு எதிராக மகா விகாஸ் அகாடி கூட்டணிக்காககாங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
மகா விகாஸ் அகாடி கட்சிக்காக நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு நடந்த அநீதி தெரியவரும்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் நமக்கான அதிகாரம் என்ன நமக்கான பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும், தற்போது இட ஒதுக்கீடுகள் உச்சவரம்பு 50% என்ற சுவர் உள்ளது. இந்த சுவரை காங்கிரஸ் தகர்க்கும். நாட்டில் உள்ள 90 % ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. இந்த தேசத்தை 5% மக்கள்தானே வழிநடத்துகிறார்கள் என்று அவர் பிரசாரத்தில் கூறினார்.