பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வெடி விபத்துகளில் உயிரிழக்கும் பெற்றோர்களின் குடும்பத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், நேற்று பட்டாசு ஆலை, அரசு குழந்தை காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அவர்கள், இந்த நிகழ்வில் சில முக்கிய விஷயங்களை மக்களோடு பகிர்ந்துள்ளார்.
அதில், கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் மருது சகோதரர்கள் போல் இந்த மண்ணுக்கு தூணாக உள்ளனர் என்று சிறப்பித்தார். மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரையும் வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர்.
மேலும் இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்கள் கூறும் போது,
காஞ்சி பேரறிஞர் அண்ணாவை பெற்றெடுத்தது. திருவாரூர் கருணாநிதியை உருவாக்கியது. இந்த விருதுநகர் காமராஜரை வழங்கியது. காமராஜர் என்றதும் எனக்கு நினைக்கு வருவது எனது திருமணம். உடல் நலிவுற்ற போதிலும் எனது திருமணத்திற்கு வந்து எங்களை வாழ்த்தியவர் காமராஜர். அதை என்னால் மறக்க முடியாது. விருதுநகருக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார்.
மேலும், திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு செய்த நன்மைகள் குறித்தும் நிறைய விஷயங்களை முதலமைச்சர் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘இந்தியா டுடே’ சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான் என்று மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி, சாஸ்தா கோயில் அணைக்கட்டு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பட்டாசு வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற உறுதியினையும் விருதுநகர் மக்களுக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின் அவர்கள்.
இறுதியாக தன்னுடைய உரையில், எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக, வளர்ச்சிக்கு சேவகனாக என்னுடைய படைகள் தொடரும் என கூறி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.