திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விமர்சனம் செய்ய, பதில் அளிக்கும் விதமாக தற்பொழுது பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில், ஒரே கையெழுத்தில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் கொடுமை செய்யப்பட்டது என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கலைஞரின் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்தி உள்ளோம் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 இலட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர். அரசு ஊழியர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்கு தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை இரத்து செய்ய வைத்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
திமுக அரசினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் :-
✓ மகளிர்க்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
✓ அரசு பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
✓ ஒன்றிய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருவது என திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும், திமுக அரசு சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் :-
✓ பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும்.
✓ வீடுகட்ட முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
✓ ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்’ நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவை மட்டுமின்றி திமுக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காத நிலையிலும், 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.