இந்தியாவில் நீராவி என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் டிரெயின்கள் இன்றளவும் ஒரு சிலவே இருக்கின்றன. அதில் நம்முடைய ஊட்டி பொம்மை ரயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன காலத்திற்கு ஏற்றவாறு ரயில்கள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் இதனைத் தொடர்ந்து தற்பொழுது மின்சாரத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண ரயில் பயணம் முதல் அதிவேக ரயில் பயணம் வரை இக்காலத்தில் மக்களின் தேவையை பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத், சதாப்தி, தேஜஸ் போன்ற சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புல்லட் ரயில் பணிகள் ராக்கெட் வேகத்தில் பறந்து செல்கின்றன. இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் நீரின் மூலம் இயங்கக்கூடிய ஹைட்ரஜன் ரயிலை பயன்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த மாதம் ( டிசம்பர் ) இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய நாட்டிலேயே முதன் முதலாக நீரின் மூலம் மட்டுமே ஓடக்கூடிய ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட இருப்பது இந்தியாவினுடைய வரலாற்று சாதனையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த ரயிலுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்காக நீர் சேமிப்புக் கிடங்கு கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “நீரில்” இயங்கும் ஹைட்ரஜன் ரயிலின் ஹைட்ரஜன் எரிபொருள் செல் மற்றும் உள்கட்டமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளது. செல் மற்றும் ஹைட்ரஜன் ஆலையின் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஹைட்ரஜன் ரயிலுக்கான விலை 80 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கிய முயற்சியாக, ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் இயக்கம் 2024-25 ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும் இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயிலினால் ஏற்படக்கூடிய நன்மைகள் :-
✓ ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் உதவியுடன், இந்த ரயிலில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை மாற்றி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த மின்சாரம் ரயிலை இயக்க பயன்படுகிறது. ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் என்ஜின்கள் புகைக்கு பதிலாக நீராவி மற்றும் தண்ணீரை வெளியிடும்.
✓ இந்த ரயிலில் டீசல் எஞ்சினை விட 60 சதவீதம் குறைவாகவே சத்தம் வரும்.
✓ இதன் வேகம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் ஆகியவை டீசல் ரயிலுக்கு சமமாகவே இருக்கும்.
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் 90 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதற்கான வழிதடங்களாக, டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, நீலகிரி மலை ரயில், கல்கா சிம்லா ரயில், மாதேரன் ரயில்வே, காங்க்ரா பள்ளத்தாக்கு, பில்மோரா வாகாய் மற்றும் மார்வார்-தேவ்கர் மதரியாவிலும் இயக்க இந்தியன் ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.