தமிழகத்தில் அரசு பள்ளியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை அரசு பள்ளிகள் வழங்கி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டி,இலவச உணவு,இலவச பாட புத்தகம்,இலவச பஸ் பாஸ் போன்றவை வழங்கப்படுகிறது.அது மட்டுமின்றி சில அரசு பள்ளிகளில் கணினி வழி கல்வி கற்று தரப்படுகிறது.இதனால் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத தனியார் பள்ளி மாணவர்கள் தற்பொழுது அரசுப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
முன்பெல்லாம் அரசு பள்ளி என்றால் ஏளனமாக பார்ப்பார்கள்.தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது.தற்பொழுது மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் கல்வி கற்பிக்க பள்ளிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்திவருகிறது.
இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு மின்னஞ்சல் அதாவது இ-மெயில் ஐடி உருவாக்கி தர அரசுப் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு தனி இ-மெயில் ஐடியை அந்தந்த வகுப்பை சேர்ந்த வகுப்பாசிரியர் உருவாக்கி தர வேண்டுமென்றும் இந்த மெயில் ஐடிக்களை எமிஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் தங்கள் உயர் கல்வி தொடர்பான தகவல்களை பெற இந்த மெயில் ஐடி உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.