மகளிர் உரிமை தொகை குறித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கூறியதாக பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், எனக்கும் உங்களுக்கும் 50 வருட கால உறவு உள்ளது என்றும் என்னை பார்ப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி. உங்களைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டிருக்கிறது. அப்படி விடுபட்டவர்களுக்கும் கிடைக்கும் வகையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார். அதன் பின்னர், நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டு, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்பொழுது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் குடும்ப விழாவாக இந்த திருமண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ‘மோடி எங்கள் டாடி’ என்று சொல்லக்கூடியவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கு அமைச்சர்களாக உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கிண்டலாக பேசியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
இந்தியாவில் முதன்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று கொண்டு வந்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் தொடங்கி 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதில் சில குறைபாடுகள் இருக்கிறது.விரைவில் அது சரி செய்யப்பட்டு அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.