டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபட்டுள்ளதால் அதனை குறைக்கும் வகையில் சில முடிவுகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன. அதில், அத்தியாவசியமற்ற முறையில் வீடுகளை கட்டுவதோ இடிப்பதோ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில வகையான வாகனங்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசுபடுதல் என்பது டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசானது படிப்படியாக அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த நிலையை விட அதிகமாக காற்று மாசுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை ஏற்படக்கூடிய காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தது. ஆனால், தீபாவளி அன்று கட்டுப்பாடுகளின் மீறி டெல்லியில் அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றது. காற்றுன் தரம் மோசமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக அதிரடி நடவடிக்கைகளாக தற்பொழுது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தற்பொழுது, Graded Response Action Plan 3 என்ற செயல் திட்டத்தை காற்றின் தர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி, குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் கௌதம் புத் நகர் போன்ற தேசிய தலைநகர் (NCR) பகுதிகளில் BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்களையும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கோபால் ராய் கூறுகையில் :-
கடந்த இரண்டு நாட்களில், இந்த பருவத்தில் முதல் முறையாக டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400ஐ தாண்டி உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் ‘மோசம்’ மற்றும் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு திடீரென ‘கடுமையான’ நிலைக்கு சென்றுவிட்டது என்றும், மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லியில் வெப்பநிலையில் சரிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வட இந்தியா முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் வறண்ட சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.