தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்றால் 80 சீட்டுகளை தவெகவிற்கு அதிமுக வழங்க வேண்டும் என்று தவெகவின் கட்சித் தலைவர் நிபந்தனை விதைத்ததாக கூறப்படுகிறது இது குறித்து விரிவாக பார்ப்போம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின் ஆட்சியையும் அதிகாரத்தையும் மீண்டும் முழுமையாக எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது.சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. ஆனால், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில், பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
மேலும் திமுகவின் உடைய கூட்டணியிலும் பல பிரச்சனைகள் விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தாலும் கூட்டணி என்பது உடைபடவில்லை. இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் “அடுத்த தேர்தலை சேர்ந்தே சந்திப்போம்” என்று கூறி வருகின்றனர்.
இவற்றை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு சந்திக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் தற்பொழுது, நடிகர் விஜய் களமிறங்கி இருக்கிறார். தி.மு.க., எதிர்ப்பை அவர் பிரதானமாக கையில் எடுத்திருப்பது, அ.தி.மு.க.,வுக்கு இணக்கமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் வாங்கி, உண்மையான பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது இல்லை.25 முதல், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே வாடிக்கையாக நடக்கிறது. தக்கவைக்கின்றனஅதாவது, எதிர்ப்பு ஓட்டுகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்வதால், பிரதான கட்சி ஆட்சியை பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடிகிறது.
இது போலவே தற்பொழுது விஜய் மற்றும் பழனிச்சாமி இருவரும் பலமான கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை உள்ளது.இளைஞர் பட்டாளத்தை எளிதில் திரட்டும் சக்தி பெற்றவர் என்பதை, முதல் மாநாடு வாயிலாக விஜய் நிரூபித்து உள்ளார். ஓட்டு வங்கியில் விரிசல் விழுந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் வெளியேறவில்லை என்பதை பழனிசாமி காட்டியுள்ளார். இருவரின் பலமும் சேரும் போது, தி.மு.க.,வின் வலுவான கட்டமைப்பை சேதப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நேரடியாக அரியணை ஏற வேண்டும் என நினைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் கண்டிப்பாக கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதனை இப்பொழுது அவர்களுடைய பேச்சு வார்த்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், பல கட்சிகள் சேர்ந்து கூட்டணி கட்சியாக ஜெயிப்பது என்பது பத்தோடு பதினொன்றாக நின்று வெல்வது போன்றதாகும். அது போன்ற கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் மாறிவிடக்கூடாது என்பதற்காக விஜய் அவர்கள் தற்பொழுது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சியாக அமைய வேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 80 சீட்டுகள் வழங்க வேண்டும் என்றும், அதிமுக 154 சீட்டுகளை தன்னகத்தே வைத்துக் கொள்ளலாம் என்றும் தவெக கழகத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
இறுதி முடிவு எதுவும் எட்டவில்லை என, இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கூறுகின்றனர். விட்டுக் கொடுக்கும் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளையும் தொண்டர்களையும் எப்படி தயார்படுத்துவது என்பதில் தயக்கம் நிலவுவதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். ‘விஜய் சுற்றுப்பயணம் சென்று வந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்’ என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.