அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் வெள்ளியங்கிரி இது குறித்து கூறுகையில் :-
கணக்கு மற்றும் தணிக்கை துறையின் வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளை அழைத்து கணக்கு துறையில் உள்ள ஓய்வூதிய பண பலன்கள் குறித்தும், அதனை மாநில அரசிடமிருந்து எப்படி சேகரித்து நாம் செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளும் விளக்கப்பட்டன.
மாநில அரசு அதிகாரிகளின் கணக்குகள் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. 1 ரூபாய் என்றாலும், அதை தணிக்கை மற்றும் கணக்கு துறை, பொறுப்பான முறையில் கையாள்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக நிதித்துறை செயலாளர் அருண் சுந்தர் பேசும்போது :-
“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணக்குத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஐஎப்எஸ்ஆர் செயலி கொண்டு வந்த பிறகு அனைத்து பணிகளும் இணையதளத்தின் துரிதமாக நடக்கின்றன. ஆங்காங்கே சில பிரச்னைகள் இருந்தாலும் அதனை உடனடியாக தீர்ப்பதாகவும், அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த பிரச்னையும் வராது” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒருவர் ஓய்வுபெற்ற உடனே, ஓய்வூதிய பலன் கிடைக்க, ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பேயே, அவரது ஓய்வூதிய கருத்துருவை கணக்கு துறைக்கு அனுப்ப வேண்டும். அதை விரைவாக பரிசீலித்து, ஆவணங்கள் விடுபட்டால், அதை கேட்டு பெற்று, உடனே அதாவது அடுத்த மாதமே ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.