தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பள்ளிகளிலேயே படங்கள் போட்டுக்காட்ட அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த படங்களை மாணவர்களுக்கு காட்டுவதற்கான வரைமுறைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2வது வாரத்தில் பள்ளிகளில் கல்வி சார்ந்த திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த செயல்பாட்டின் மூலம் மாணவர்கள் பல்வேறு வகையான கலாச்சார தனித்தன்மை, வாழ்க்கை சூழல், நட்பு பாராட்ட, குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவத்தை அறிந்து கொள்ள, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரவும் இத்திரைப்படம் வழி வகுக்கும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி திரை துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கதை எழுதுதல், பாடல் எழுதுதல், நடிப்பு, தயாரிப்பு, கேமரா, எடிட்டிங் முதலிய தொழில் நுட்பங்களை வளர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தினை திரையிடுவதற்காக அரசு வழங்கியுள்ள வழிமுறைகள் :-
✓ இதற்கென தனி ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
✓ படம் திரையிடுவதற்கு முந்தைய மாதத்தின் முதல் வாரத்தில் அப்படத்தினை EMIS தளத்திலிருந்து தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.
✓ குறிப்பாக, திரையிட போகும் படங்களை இந்த தளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
✓ மேலும் இந்த திரைப்படத்தினை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுவதற்கு முன்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இப்படத்தினை பார்த்திருத்தல் அவசியம்.
✓ படத்தின் தலைப்பை பள்ளி வளாகத்தின் சுவரொட்டியில் ஒட்டி வைக்க வேண்டும்.
மேலும், திரைப்படங்களைப் பற்றி கூற ஆர்வமுள்ள துறை சார்ந்த வல்லுநரை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்ற செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.