அரசு வேலையில் பல்வேறு துறைகள் உள்ளன. அந்த வகையில் ஒன்றுதான் அரசு ஓட்டுநர் பணி. என்னதான் தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளுக்குக் கட்டணம் சற்று குறைவாக இருந்தாலும் அதில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு சில சிரமங்கள் இருந்துதான் வருகிறது. இதற்காக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது அரசுத்துறை ஓட்டுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் மயிலாடுதுறையில் நவம்பர் 24, 2024 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பி. பச்சையப்பன் தலைமை வகித்துள்ளார். அவர்கள் வெளியிட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: “ஜூன்1, 2009 ஆம் ஆண்டில் 10 முதல் 20 ஆண்டுகள் ஓட்டுனராகப் பணிபுரிந்து சிறப்பு நிலை பெற்ற ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல், தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல் மாநிலம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு துறை ஓட்டுனர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” ஆகிய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உதயகுமார், அம்பிகாபதி, ராஜேந்திரன், விஜயபாலன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.