டெல்லி: பிரதமர் மோடியின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்மலா சீத்தாராமன், ஸமிருதி ராணி, பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
அரசு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல மாநில கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்று கூறினார். ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் இதற்கான அவசர சட்டத்திற்குத் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 1540 வங்கிகளில் முதலீடு செய்துள்ள 8.6 முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் முதலீடு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு ஒப்புதல், பால் மற்றும் கோழி இறைச்சி பதப்படுத்துதலுக்காக ரூ.15 ஆயிரம் கோடி உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் இதர பிரிவு குறித்து ஆராயும் குழுவின் பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.