தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளதால் நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்வதால், நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நாகை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நவம்பர் 26, 2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மட்டும் இல்லாமல் திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்டத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.