மத்திய அரசானது அரசின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு ஏற்ற வகையில் ஒரே நாடு ஒரே சந்தா என்ற புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, “ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான “ஒரே நாடு ஒரு சந்தா” வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புதிய மத்திய துறைத் திட்டமாக, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு, ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக மொத்தம் சுமார் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா என்பது, இந்திய இளைஞர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அதிகபட்சமாக்குவதற்காக, கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் பயன்கள் :-
✓ மத்திய அல்லது மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தன்னாட்சி மையமான தகவல் மற்றும் நூலக இணைப்பு என்ற மத்திய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சந்தா மூலம் வழங்கப்படும்.
✓ இந்த பட்டியலில் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கிட்டத்தட்ட 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஒரே நாடு ஒரே சந்தாவின் பலன்களைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை, “ஒரே நாடு ஒரே சந்தா” என்ற ஒருங்கிணைந்த வலைதளத்தை கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.