தமிழகத்தில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காற்று வீசுகிறது.காலையில் பனி பொழிவு அதிகமாகி வெப்பம் தணிகிறது.குளிர்காலம் பிடித்தமான காலநிலையாக இருந்தாலும் சரும பிரச்சனை,மூட்டு வலி போன்றவை எளிதில் வரக் கூடிய மாதமாக இது உள்ளது.
குளிர்ந்த காலநிலையால் மூட்டு பகுதியில் விறைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படுகிறது.இதனால் நடப்பதில் சிரமம் ஏற்படுவதோடு அன்றாட பணிகள் மேற்கொள்ள மிகுந்த சிரமமாக இருக்கும்.
குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்கி மூட்டுகளில் இரத்த ஓட்டம் குறைந்து வலி ஏற்படுகிறது.எனவே குளிர்காலத்தில் மூட்டுவலி ஏற்படாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை செய்து வாருங்கள்.
மூட்டுகளை சூடாக வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது குறையும்.வெந்நீர் கொண்டு மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.சூட்டை உண்டாக்கும் துணிகளை உடுத்தலாம்.தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்யலாம்.
இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து பானம் தயாரித்து பருகலாம்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் மற்றும் பிற உணவுகளை உட்கொள்ளலாம்.தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.தண்ணீரை சூடாக்கி பாட்டிலில் ஊற்றி மூட்டு பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப்,பிரண்டை சூப் செய்து சூடாக பருகலாம்.குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்க பழகுங்கள்.இதுபோன்ற விஷயங்கள் மூலம் இயன்றவரை மூட்டு வலியை குணமாக்கலாம்.