தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து கொண்டேயுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தினமும் 2000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் இதுவரை 64603 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35339 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவிலான பரிசோதனை, தரமான சிகிச்சை மற்றும் கொரோனாவிற்கு எதிரான சிறப்பான கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் என கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகளுக்கு இடையே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளையும்,நல திட்டங்களையும் தொடர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது. ஆனாலும் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறை கூறுவதும், விமர்சிப்பதையுமே வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்வதை மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.குறிப்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பிப்பதற்கு முன்பிலிருந்து அரசுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
உலக நாடுகளே ஆடிப் போயுள்ள இந்த கொரோனா பாதிப்பில் தமிழக அரசு கிடைத்த வாய்ப்பில் தங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆனால் திமுக தலைவர் வழக்கம் போல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் காலம் தாழ்ந்து செயல்படுவதாக ஸ்டாலினும் திமுகவின் மூத்த நிர்வாகிகளும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செய்வதை விமர்சிப்பது மட்டுமல்லாமல் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்ற கேட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்ததையும் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு கடவுள் மீது பழியையும் பாரத்தையும் இறக்க முயல்வதாகவும் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
மேலும் மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதிலேயே எடப்பாடி அரசு கவனம் செலுத்துவதாக தன்னுடைய வழக்கமான பாணியில் ஊழல் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு மக்களின் மீது கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக தமிழக முதல்வர் மீது குற்றம் சாட்டிய ஸ்டாலின், கொரோனா பாதிப்பினால் மக்கள் வாழ்வா சாவா என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தோற்றத்தை அழகு படுத்தும் வகையில் புதியதாக விக் ஒன்றை வைத்துள்ளார்.
இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த நேரத்தில் திமுக தலைவர் விக் வைத்து வெளியிட்ட ஒரு புகைப்படம் மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய இந்த இக்கட்டான காலத்தில் ஒன்றினைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து அதன் மூலமாக மக்களை சந்திக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இந்த ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தது ஸ்டாலினுக்கு பெரும் பின்னடவை கொடுத்தது. இதனையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இது குறித்து ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து தற்போது இந்த விக் விவகாரத்தில் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக அவருக்கு எதிராக “மக்கள் மீது அக்கறை காட்டும் ஒரு தலைவர் செய்யும் வேலையா இது? உடற்தோற்றத்துக்கும் இளமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நேரமா இது? இந்த இக்கட்டான காலத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் செய்யும் காரியமா இது? பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக தமிழக முதல்வரை விமர்சிக்கும் ஸ்டாலின், இந்த பேரிடர் காலத்தில் புதிய “விக்” மட்டும் வைத்துக் கொள்ளலாமா? நெருக்கடியான நேரத்திலும் விக் வைத்துக்கொள்ளும் ஸ்டாலினுக்கு ஆளுங்கட்சியை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது?” உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகளை பொதுமக்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பி வருகின்றனர்.
இப்படி மக்கள் கொரோனாவால் இன்னல்படும் இந்த நேரத்தில் தனது தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சியையும், தமிழக அரசையும் விமர்சிக்கும் தார்மீக உரிமையையும், தகுதியையும் இழந்துவிட்டதாகவே மக்கள் கருதுகின்றனர். இனி தமிழக அரசை எதிர்த்து ஸ்டாலின் எதை பேசினாலும் அது மக்களிடம் எடுபடாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவுள்ளது.