சமீப காலங்களில் “பிட்காயின்” என்பது பல மக்களிடையே பேசும் பொருளாக மாறிவிட்டது. பிட்காயின் என்பது 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை சடோஷி நகமோட்டோ என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் யார் என்றும், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் எதுவுமே தெரியவில்லை. இது ஆரம்பக் காலகட்டங்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது பிட்காயினின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு வெறும் ரூ. 1000-ஐ முதலீடு செய்திருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்றும், அதில் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது பற்றியும் இங்கு விரிவாகப் காண்போம்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் தனது ஆட்சியில் பிட்காயினுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதை அடுத்து பிட்காயின் விலை தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகின்றது. இப்போது பிட்காயினின் விலை ரூ. 80,16,670-ஆக இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இந்தப் பிட்காயினில் முதலீடு செய்திருந்தால் இப்போது எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பிட்காயின் ஆரம்பக் காலகட்டங்களில் எந்த ஒரு மதிப்புமே இல்லாத ஒரு டிஜிட்டல் நாணயமாகவே இருந்தது. 2010-ஆம் ஆண்டுதான் பிட்காயின் முதல் முறையாக டிரேடிங் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அதன் மதிப்பு ரூ. 1 கூட இல்லை. ஆனால் இப்போது ஒரு சிறிய துளி பெரு வெள்ளமாக மாறியதுபோல் பெரிதாகியுள்ளது. 2010-ஆம் ஆண்டு பிட்காயினில் ரூ. 1,000 முதலீடு செய்திருந்தால் இப்போது எவ்வளவு கிடைத்திருக்கும்? 2010-ஆம் ஆண்டு பிட்காயின் விலை $ 0.08 டாலராக இருந்தது. அப்போது ஒரு டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 42 ஆக இருந்தது. எனவே, ரூபாய் மதிப்பில் அது ரூ. 3.38 ஆக இருந்தது. ஆகையால், ரூ. 1000 க்கு 295.85 பிட்காயின்களை வாங்கி இருக்க முடியும்.
இப்போது 2014 நவம்பர் மாதப்படி, ஒரு பிட்காயின் சுமார் $ 98,000 டாலர்களுக்கு டிரேட் செய்யப்படுகிறது. இப்போது ஒரு டாலர் ரூ.84.45 ஆக உள்ளது. அதாவது, ஒரு பிட்காயின் விலை ரூ. 82,76,100. ஒருவரிடம் 295.85 பிட்காயின்கள் இருக்கும் நிலையில் இதை வைத்துக் கணக்கு போடும்போது ஒருவரிடம் ரூ. 244 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இது கேட்பதற்கு நன்றாகவே இருந்தாலும் ஒரு சிக்கல் உள்ளது. காரணம், பிட்காயினின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும்.
என்னதான் விலை அதிகரிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும் குறையும் போது சற்று கவலையும் பயத்தையுமே மக்கள் கொள்கிறார்கள். பிட்காயின் எந்த ஒரு ரெகுலேஷனுக்குக் கீழும் வராது. இதனால் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் யாரிடமும் புகார் அளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
(இது தகவலுக்காகக் கொடுக்கப்பட்ட செய்திதான். இதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முதலீடு சார்ந்த ஆலோசனைகளைத் தங்கள் பொருளாதார ஆலோசகரிடம் கேட்டு முடிவு செய்து கொள்வது நல்லது).