இன்டர்நெட் வசதி என்பது மக்களின் அத்தியாவசிய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. பெரும்பாலான மக்கள் 4ஜி நெட்வொர்க்கில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டனர். எனினும் இன்னும் சில கிராமப்புறங்களில் இன்டர்நெட் சேவையானது குறைந்த அளவே பயன்படுத்தும் படி அமைந்திருக்கிறது.
இவ்வாறு உள்ள கிராமப்புறங்களில் நகரங்களில் உள்ளது போலவே அதிவேக இன்டர்நெட் சேவைகளை உருவாக்கும் வண்ணம் அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் முழுமையாக காண்போம்.
இன்றைய கால கட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாக இணைய சேவை மாறிவிட்டது. அரசின் சேவைகள் முதல் டிக்கெட் புக்கிங், வங்கி பணிகள் என பெரும்பாலான பணிகளை இணைய சேவை இருந்தால் வீட்டில் இருந்தே பெற்று விட முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவையை முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள செல்போன் டவர்கள் மூலம் தான் இண்டெர்நெட் வசதியை பெறுகிறார்கள்.கிராமப்புறங்களோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகமாக அதாவது 100 மெகாபைட்ஸ் என்ற வேகத்தில் இணைய சேவை கிடைக்கிறது. இந்த நிலையில் தான் நகர்ப்புறத்தில் உள்ளது போன்றே, கிராமப்புறங்களிலும் 100 மெகாபைட்ஸ் வேகத்தில் இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை பாரத் நெட் மூலம் வழங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, முதற்கட்டமாக சுமார் 950 கிராமங்களில் பைபர்கேபிள்கள் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. தற்போது இந்த கிராமங்களில் தனியார் ஆபரேட்டர்களின் உதவியோடு இணையதள சேவையினை வழங்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக வரும் மார்ச் மாதம் இந்த 950 கிராமங்களில் மிக அதிவேக இணையதள வசதியினை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மாணவ மாணவிகள், வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், ஆன்லைனில் படம் பார்ப்பவர்களுக்கு இணையதளம் ஒரு தடையாக இருக்காது.