தமிழ்நாடு அரசு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இலவச கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்போது நடமாடும் கண் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த நடமாடும் கண் மருத்துவமனைகளில் புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை நிறுவவும் அரசு தெரிவித்திருக்கிறது.
அரசாணையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-
“50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே காணப்படும் பார்வை குறைப்பாட்டில், தேசிய சராசரியான 1.99 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பார்வை குறைபாடு நோய் வீதம் 1.18 சதவீதமாக உள்ளது. பார்வையின்மையைக் குறைப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
முன்னிலையில் இருந்த போதிலும், ஊரக, கிராமப்புற மற்றும் அணுகுவதற்கு கடினமான பகுதிகளில் உள்ளவர்களையும் குணப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடமாடும் பிரிவுகள் ஒளிவிலகல் குறைபாடுகள், கண்புரை, பார்வை நரம்பு சிதைவினால் ஏற்படும் கண் அழுத்த நோய் (கிளகோமா), நீரிழிவு காரணமாக ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் (டயாபடிக் ரெட்டினோபதி) மற்றும் ஏனைய கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை செய்வதற்கான வசதிகளை வழங்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவிலும், மேல் சிகிச்சை (Further Treatment) தேவைப்படும் பயனாளிகள், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்கு, அறுவை சிகிச்சைக்காக அல்லது லேசர் கதிர் சிகிச்சைக்காக அரசு கண் மருத்துவமனைகளுக்கு இந்த வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடமாடும் கண் மருத்துவமனை திட்டமானது ஏற்கனவே சேலம் உட்பட 11 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், தற்பொழுது அதை விரிவு படுத்தும் விதமாக தருமபுரி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இப்பிரிவுகள் நிறுவுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவும் ரூபாய் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, போதுமான எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தி, பயனாளிகளை பரிசோதித்து, தேவை ஏற்படின் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.