காவல் பணியாளர்களாகவே தங்களுடைய 35 ஆண்டுகால பணியை நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவல்துறையினர் பயன்பெறும் வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றினை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம்.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீஸாரை மகிழ்விக்கும் வகையில், காவலர்களாகப் பணியில் சேர்ந்து 35 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 35 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்யும் போலீஸாரின் பட்டியலை அனுப்ப மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு டிஜி.பி. அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் பேரில் 35 ஆண்டுகால பணி நிறைவு அடையக்கூடியவர்களின் லிஸ்டானது அனுப்பப்பட்ட வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 பேருக்கு குறையாமல் இருப்பதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் வரை தகுதி பெறுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி வழங்கி, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணியில் இருந்து ஓய்வு பெற விரும்பும் காவலர்களை பதவி உயர்வு கொடுத்து மீண்டும் பணியாற்ற வைப்பதுடன் அவர்களுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இது அமையும் என காவல்துறை சார்பிலும் அரசு சார்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காவல்துறையில் 2006-2011-ம் ஆண்டு 2-ம் நிலை காவலர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள், முதல்நிலை காவலர் மற்றும் 15-ம் ஆண்டில் தலைமைக் காவலராகவும், 25-ம் ஆண்டில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கி, சம்பளமும் உயர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.