இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் யாசகம் பெறுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் இவர்களை காண்பது எளிதான காரியம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் யாசகம் பெறுபவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி யிருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர்.
இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :-
ஏற்கனவே இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளோம். பிச்சை எடுப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதி வரை இந்த பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். பிச்சை போடுவதன் மூலம் அந்த பாவத்தில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று இந்தூர் மக்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.