தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரக்கூடிய செய்தியாக, 2025 ஆம் ஆண்டு முதல் வங்கிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விளக்கத்தை இந்த பதிவில் காண்போம்.
தற்போது வரையில், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. வங்கி ஊழியர்கள் தங்களுக்கு வாரத்தில் 2 தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் இப்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய மாதத்தின் 2 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருப்பதையும் விடுமுறை நாட்களாக மாற்றி தரும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த தகவல் ஆனது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது :-
2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
அதில், பொது விடுமுறை ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் அரசு விடுமுறையானது தமிழக அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதிலும் குறிப்பாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள சனி மற்றும் ஞாயிறு விடுமுறையானது அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர்.
ஆகவே, வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பது தவறாக பரப்பப்படும் செய்தி என்றும், மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றால் அதனை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.