உட்காரும் போதும் நடக்கும் போதும் சரியாக நிமிர்ந்த நிலையில் இல்லாமல் இருப்பது முதுகுவலி வர முக்கியமான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிலும் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய அலுவலில் இருப்பவர்கள் இதை கவனிக்க வேண்டும். இல்லையேல் முதுகுவலி நிச்சயம் என்கின்றனர்.
முதுகுவலியை தீர்க்கும் எளிய வழிகள்:-
* உடற்பயிற்சி என்பது கட்டுகோப்பான உடல் அமைப்புக்கு மட்டுமல்ல வலுவான உடலுக்கும் வலியில்லா முதுகுக்கும் உத்தரவாதம் தரக்கூடியதாகும். ஆகவே நடப்பது, ஓடுவது போன்ற எளிய உடற்பயிற்சிகளும், யோகா போன்ற பயிற்சியும் முதுகு வலியை விரட்டும் பயிற்சியாக நிரூபிக்கப்பட்டவை.
* நீச்சல் பழகுங்கள், முதுகு வலியை ஓட ஓட விரட்டும் ஒரு நல்ல பொழுதுபோக்கும் உடற்பயிற்சி நீச்சலே. உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் ஏற்ற சிறப்பான உடற்பயிற்சி நீச்சலாகும்.
* அருகிலுள்ள கடைகளுக்கும், இடங்களுக்கும் நடந்து செல்ல முனையுங்கள் அல்லது மிதிவண்டியில் பயணியுங்கள்.
* படுக்கை இன்னொரு முக்கியமான விஷயம். அதிகமான சொகுசு வேண்டும் என நீங்கள் தேர்ந்தெடுத்தால் துன்பத்தையும் சேர்த்தே எடுக்கிறீர்கள் என்று பொருள். முதுகை நேராக பிடிக்கக் கூடிய படுக்கைகளே பாதுகாப்பானதாகும்.
* உங்கள் தலையணை பருமனை பாருங்கள், அளவாய் இல்லாமல் உயரமாகவோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தால் முதுகுவலி நிச்சயம்.
* புகைப்பதை நிறுத்துங்கள். புகை பிடிப்பதால் உடலிலுள்ள உயிர்வளியின் அளவு குறைந்து முதுகுவலியை ஏற்படுத்துகிறது.
இந்த காரணங்களைத் தவிர உடலிலுள்ள குறைபாடுகளின் காரணமாகவும் முதுகுவலி வரக்கூடும். மேற்சொன்னவற்றை கடைபிடித்தும் முதுகுவலி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.