ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்றதில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நாக துளசி என்ற பெண், வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். சமிதி அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக ஓடுகளை அனுப்பியிருந்தது.
அவர் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் பணிக்கு மேலும் உதவி கோரினார். அந்த வகையில் அவருக்கு மின்சாதனங்கள் வழங்குவதாக சமிதி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என விண்ணப்பதாரருக்கு வாட்ஸ்அப்பில் செய்தி வந்துள்ளது.
இந்நிலையில் ஒரு நபர் வியாழக்கிழமை இரவு அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு, அதில் மின்சாதனங்கள் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் அந்த பார்சலை திறந்து பார்த்த துளசி அதில் ஒருவரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைக்கண்ட அவரது குடும்ப உறுப்பினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து அருகிலுள்ள போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர், புகாரின் அடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு வந்த போலீசார் அந்த பார்சலை கைப்பற்றி அதிலிருந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அத்னான் நயீம் அஸ்மியும் கிராமத்திற்குச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் 1.30 கோடி வழங்கக் கோரியும், கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும் கடிதமும் பார்சலில் காணப்பட்டது.
பார்சலை டெலிவரி செய்த நபரை போலீசார் அடையாளம் காண முயன்றனர். க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள காவல் நிலைய எல்லைக்குள் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை போலீஸார் சரிபார்த்து வருகின்றனர்.