புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளாக அமைந்திருக்கும் சூழலில், வழக்கமாக புதுச்சேரியில் இரவு 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு புத்தாண்டையைத் தொடர்ந்து இரவு ஒரு மணி வரை மதுபானங்கள் விற்பனைக்கு புதுச்சேரி மாநில அரசு ஒப்புதல் வழங்குகிறது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டமானது ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு மக்கள் கலந்து கொள்வார்கள். இங்கு பல சிறப்பு நிகழ்வுகள் நடக்கும், குறிப்பாக தனியார் ஹோட்டல்களில் பெரிய பார்ட்டிகள் நடத்தப்படும்.
இது போன்ற கொண்டாட்டங்களுக்கு இப்பொழுதிலிருந்தே ஆன்லைன் மூலம் ஹோட்டல்களில் பலரும் முன்பதிவு வருவது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து ஏராளமான இளைஞர்களும், பெண்களும் புதுச்சேரிக்கு வருவார்கள். அதிக மக்களை வரவழைக்க புதுச்சேரி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
புதுச்சேரியை பொருத்தவரையில் மதுபான கடைகள் சாதாரண தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். ஆனால் ரெஸ்ட்ரோ பார்களோ நள்ளிரவு 12 மணி வரை செயல்பட புதுச்சேரி மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2025 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, மதுக்கடைகள் மற்றும் பார்கள் கூடுதல் நேரம் திறக்கப்படுவது குறித்து கலால் துணை கமிஷனர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு கடை இரவு 11 மணிக்குப் பிறகு மது பானங்களை விற்க விரும்பினால், அவர்கள் அரசுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கமான கடைகளுக்கு, 5,000 ரூபாய் கட்டணமும், பார் வசதி இருந்தால் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க 10,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ரெஸ்டோ பார் அல்லது ஹோட்டலாக இருந்தால் 5,000 ரூபாய் கட்டணம், ஹோட்டலில் சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தால் 15,000 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டபடி அதிக நேரம் மதுபான கடைகளை அல்லது ரெஸ்ட்ரோபார்களை திறக்க வேண்டும் எனில் அதற்கான கட்டணத்தை செலுத்தி முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும் அது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.