நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையின் (FEE) ஒரு கடற்கரை , மெரினா அல்லது நிலையான படகுச் சுற்றுலா ஆபரேட்டர் அதன் தரங்களைச் சந்திக்கும் சான்றிதழாகும். நீலக் கொடி என்பது FEE க்கு சொந்தமான வர்த்தக முத்திரையாகும் , இது 77 உறுப்பு நாடுகளில் உள்ள 65 நிறுவனங்களைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பாகும்.
இப்படிப்பட்ட நீலக்கொடி திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் அங்குள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நீலக் கொடி கடற்கரை திட்டமானது ஏற்கனவே இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டில் இருக்கக்கூடிய கோவளம் கடற்கரைக்கும் நீலக்கொடி அந்தஸ்தானது வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டையை தொடர்ந்து சென்னை மெரினாவில் நீலக்கொடி அந்தஸ்தினை பெறுவதற்காக கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள நடைபாதை, மிதிவண்டி தடங்கள், படகு துறை மற்றும் விளையாட்டு பகுதி என்று அனைத்தும் இந்த திட்டத்தில் அமைய இருக்கிறது என்ற தகவல்களும் வெளிவந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சென்னை லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றன. இது குறித்து மயிலை நொச்சிக்குப்பம் மீனவர் சபையின் முன்னாள் துணைத் தலைவர் கு.பாரதி தெரிவித்திருப்பதாவது :-
இந்த நீலக்கொடி திட்டத்தின் மூலம் மெரினா கலங்கரை விளக்க முதல் நொச்சிக்குப்பம் வரையிலான பாதையில் 3 இடங்களில் மட்டுமே கடற்கரைக்கு செல்வதற்கான வழி அமையும் என்றும், இதனால் இந்த பகுதிகளில் பாரம்பரியமாக மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, மெரினாவிற்கு நீலக்கொடி கடற்கரை திட்டம் வழங்கப்பட்டு விட்டால் மெரினாவிற்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி விட்டு தான் வரவேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால் கலங்கரை விளக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையிலான பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மீனவர்களின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து, நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.