2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது.
இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது இந்த முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணமாக கடந்தாண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியானது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களுடைய உற்சாகம் மற்றும் வரவேற்பு பெருமளவில் இருந்ததால் மீண்டும் இந்த மலர் கண்காட்சியானது துவங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2 ஆம் தேதி ஆன இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலர் கண்காட்சியானது காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு 150 ரூபாய் செலுத்தி விட்டு இந்த மலர் கண்காட்சியை கண்குளிர ரசித்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் தவிர சிறியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 75 நிர்ணயிக்கப்பட்டிருப்பதையும் தமிழ்நாடு தோட்டக்கலை துறை குறிப்பிட்டு இருக்கிறது.