பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதால் மக்கள் தங்களுடைய திருமணங்களை முறைப்படி பதிவு செய்வதில்லை என்பதை உறுதி செய்த அரசு, அதனை தற்போது மாற்றும் வகையில் புதிய முயற்சிகளை எடுக்க உள்ளது.
இதில், திருமணங்களை பதிவு செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய திருமண ஆவணங்களை முறைப்படி அப்லோடு செய்வதன் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டில் இருந்தபடியே திருமண பதிவு ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது லஞ்சம் போன்ற குற்ற செயல்களை தடுக்கும் மிகப்பெரிய முயற்சியாகவும் அமையும் என அரசு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.