அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவதாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதனை தற்பொழுது நிறைவேற்றி தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் ஜனவரி 3 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மத்திய குழு உறுப்பினர் பெ சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-
✓ பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும்
✓ அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்படும்
✓ சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை
✓ ரூ 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 பி நடவடிக்கைகளை திரும்பப் பெற்று நிவாரணம் வழங்குதல் போன்றவை.
திமுக அரசால் 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முகமைக்கு வழங்க எடுத்த முடிவானது ஊழியர்களுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஓய்வூதியம் குறித்தும் இதில் கூறப்பட்டிருப்பதாவது, ” தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் அங்கமாக மாறாத சூழலிலும் பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படுவது என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாதது ஏனென்று கேள்வியும் எழுந்திருக்கிறது”.