ADMK TVK:விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை மட்டுமே பாதிக்கும் என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் 53வது ஆண்டு கொடியேற்று விழாவில் கலந்துக் கொண்டு விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளை மட்டுமே உடைக்கும்.
அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. தற்சமயம் திமுக கூட்டணி சிதறு தேங்காய் போல உடையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்த ஆட்சி தேவையா என்ற கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது. திமுக ஆட்சியை மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
மேலும், திமுக ஆட்சியைத் தறுதலை ஆட்சி என விமர்சித்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. திமுக கூட்டணி சிதறி வரும் நிலையில், அதிமுக 234 தொகுதிகளில் 200 இடங்களில் வெற்றி பெறும். மேலும் பட்டாசு வெடி என ஆரம்பித்து தொடர்ச்சியாக நிகழும் விபத்துகளுக்கு திமுக அரசு தான் முற்றிலும் பொறுப்பு. இதனால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இது தொழிலை நசுக்கும் திமுக அரசின் நடவடிக்கை.
அமலாக்கத்துறை சோதனையானது துரைமுருகனுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளது. மேலும், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு போன்ற திட்டங்கள் சரியாக செயல்படவில்லை. இபிஎஸ் தலைமையிலான அதிமுக-வானது மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் திறன் பெற்றுள்ளதாக நம்பிக்கை அளித்துள்ளார்.