இந்த வருடத்தில் பொங்கல் விடுமுறையானது, ஜனவரி 14 முதல் 19 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் உள்ளது. இந்த விடுமுறைக்கு கண்டிப்பாக பலரும், அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி போன மாதம் முதலே, விடுமுறை நாட்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளும், அதன் பயண சீட்டுகளின் முன்பதிவும் ஆரம்பமாயின. ஆரம்பித்த முதல் வாரமே அனைத்து சீட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
மேற்கொண்டு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இப்படி இருக்க ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. சாதாரண நாட்களில் பயணம் செய்தாலே, ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலையானது சற்று உயரமாகவே இருக்கும். பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறை என்றால் சும்மா விடுவார்களா?
சென்னையில் இருந்து கிளம்பும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உச்சத்தை தொட்டுள்ளது. சில ஆம்னி பேருந்துகளில் நெல்லைக்கு செல்ல ரூபாய் 4000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. மதுரைக்குச் செல்ல ரூபாய் 3800 ஆகவும், கோவைக்குச் செல்ல ரூபாய் 3500 ஆகவும் உயர்த்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து, பண்டிகை காலங்களில் திடீரென இயக்கும் ஆம்னி பேருந்துகளின் விலை என்னவோ? இதனால் பயணிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளின் இந்த விலை உயர்வு தாண்டவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க 1800 425 6151 மற்றும் 044-24749002,044-26280445, 044-26281611 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.