பிறக்கும் குழந்தையானது நல்ல அறிவாற்றலுடனும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் எண்ணம். நாம் நினைத்தவாறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம்.
பெற்றோர்கள் எவ்வாறு புத்திசாலித்தனமாக இருக்கிறார்களோ அவ்வாறே குழந்தைகளும் இருக்கும்.
அதாவது குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு மரபணு தான் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது முற்றிலும் தவறு. ஏனென்றால் ஒரு குழந்தையின் அறிவாற்றலுக்கு மரபணு காரணம் அல்ல. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரையில் என்ன நிகழ்வுகளை காண்கிறதோ அல்லது எந்த சூழ்நிலையில் வளர்கிறதோ அதற்கு ஏற்றார் போல் தான் அக்குழந்தையின் அறிவாற்றலும், புத்தி கூர்மைகளும் இருக்கும் என்று ஆராய்ச்சியானது கூறுகிறது.
எனவே குழந்தைகள் வளர்வதற்கு தகுந்த சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு கருவிலேயே மூளை வளர்ச்சி தொடங்கி விடும். எனவே குழந்தையின் தாய் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ வேண்டும்.
அடுத்தபடியாக குழந்தைகளுக்கு தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். எனவே குழந்தைகள் எந்தவித இடையூறுமின்றி நன்றாக தூங்குவதன் மூலம் மூளையின் வளர்ச்சி ஒருங்கிணைக்கப்படும். குழந்தைகளின் தூக்கம் இன்மை நினைவாற்றலை மேம்படுத்துவதை தடுப்பதோடு கவனம் சிதறுதல் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
குழந்தைகளின் சிறந்த மனநிலைக்கு உதவுவது விளையாட்டு. எனவே குழந்தைகள் விளையாடுவதற்கு என நல்ல பயனுள்ள பொம்மைகளை வாங்கி தர வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து விளையாடும் போது குழந்தைகளுக்கு சமூக உணர்ச்சி மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை, பகிர்ந்து கொடுக்கும் தன்மை போன்ற பண்புகளும் வளர்ச்சி அடையும்.
குழந்தைகளின் தேவைகளை பெற்றோர்கள் தான் அறிந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது குழந்தைக்கு எப்போது உணவளிக்க வேண்டும்? எந்த உணவை கொடுக்க வேண்டும்? சத்தான உணவுகள் எவை? என்பதை அறிந்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும்.
குழந்தைகளின் ஸ்கிரீன் டைம்மை குறைக்க வேண்டும். அதாவது டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தடுக்கும்.