பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.கர்ப்ப காலத்தில் தாய் கடைபிடிக்கும் உணவுமுறையை பொறுத்து தான் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.
தாய் மற்றும் சேய் நலமாக இருக்க கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில் உட்கொள்ளும் உணவில் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்று சொல்லப்படும் அவர்களின் கர்ப்ப காலத்தில் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் வாந்தி,குமட்டல்,உடல் சோர்வு,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திப்பதால் உணவை தவிர்க்கின்றனர்.இதனால் தாய் சேய் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடுகிறது.
கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதத்தில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த போலிக் அமிலம் கீரையில் தான் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இரும்புச்சத்து,வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை காய்கறி உணவுகள்,கீரை வகைகள்,முழு தானிய உணவுகளை கருவுற்ற காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.உளுந்தம் பருப்பில் புரதச்சத்து அதிகளவு நிறைந்திருப்பதால் இதில் கஞ்சி,வடை செய்து சாப்பிடலாம்.
துவரை,பாசிப்பருப்பு,ராஜ்மா,சோயா போன்ற பொருட்களில் புரதச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் முட்டையில் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது.
முளைக்கட்டிய தானியங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.ஆரஞ்சு,மாதுளை,ஆப்பிள் போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும்.கால்சியம் குறைபாட்டை தவிர்க்க தினமும் ஒரு கிளாஸ் பால் பருக வேண்டும்.பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.