கடந்த பத்து நாட்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவப்படையால் நாடு கடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்த சரஸ் விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை கொண்டு வந்த மூன்றாவது விமானம் தரை இறங்கியது.
இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் பிடியில் இருந்து வந்த இந்தியர்கள் அங்கு தங்களுக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்து வருகின்றனர். இப்படியாக பலர் கூறுவது அந்த முகாம்களில் தங்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லை என்பதே.
மேலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் குடியேறிய இந்தியர்களை பிடித்து முகாம்களில் அடைத்த ராணுவப்படையினர் கடுமையான குளிரில் போர்வை கூட தர மறுத்ததாகவும், வேகாத ரொட்டி, சரியான முறையில் வேகவைக்காத அரிசி மற்றும் சோளம், காய்கறிகளில் வெள்ளரி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவை வழங்கப்பட்டதாகவும் சைவ பிரியர்களுக்கு இதே உணவுகளே வழங்கப்பட்டு அவர்களுக்கென தனியாக ஒரு உணவு இல்லை என்ற குற்றத்தையும் முன் வைத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்ட இந்தியர்கள் மட்டுமல்லாது 18 நாடுகளை சேர்ந்தவர்களையும் அவர்களுடைய மதங்களையும் அவமதித்ததாக தெரிவித்திருக்கின்றனர். சரியான உணவு இல்லாமல், குடிநீர் இல்லாமல் உடைகள் கூட வழங்கப்படாமல் கடும் குளிரில் பயங்கரமான சித்திரவதைக்கு உள்ளானதாக கண்ணீர் மல்க விவரித்து இருக்கின்றனர்.